» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமொழி எம்பி பெயரை பயன்படுத்தியது தவறு தான் : மன்னிப்புக் கோரிய இளைஞர்!
வியாழன் 3, அக்டோபர் 2024 10:12:54 AM (IST)
கோவையில் கனிமொழி எம்பி உதவியாளரின் தம்பி என போலீசாரிடம் பொய் சொல்லி மாட்டிகொண்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டுகொண்டனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் போலீசார் தினமும் வாகன சோதனை நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல் 100 அடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த காரில் மொத்தம் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களை போலீசார் காரில் இருந்து கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், 'நான் திமுக எம்பி கனிமொழியின் பி.ஏ அவர்களுடைய தம்பி. நாங்க வந்த காரும் அவருடையது தான். நீங்கள் அவரிடம் பேசுங்கள்' என போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனிடையே கனிமொழியின் பி.ஏ அவர்களுடைய தம்பி என்று போலீசாரை மிரட்டி, ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது, காந்திபுரத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பொள்ளாச்சியில் இருந்து வந்த 25 வயதாகும் கிரண், 27 வயதாகும் பாலாஜி மற்றும் 24 வயதாகும் சிவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே திமுக எம்.பி. கனிமொழியின் பெயரை காவல்துறையிடம் தவறாக பயன்படுத்தியதற்காக இளைஞர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அந்த இளைஞர் கூறுகையில், வணக்கம் என் பெயர் கிரண், நானும் எனது நண்பர்களும் நேற்று பொள்ளாச்சியில் கோவைக்கு தனிப்பட்ட வேலைக்காக வந்திருந்தோம்.. எங்கள் வேலையை முடித்துவிட்டு, கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு போகும் போது, நான் மதுபோதையில் இருந்தேன்.
அப்போது போலீஸ் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தடுத்து நிறுத்திய போது, போலீசாரிடம் தவறான வார்த்தைகளை பேசிவிட்டேன்..அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் திமுக எம்பி கனிமொழி அவர்களின் பெயரை பொதுவெளியில் பயன்படுத்தியது தவறு தான்.
அவருடைய பிஏ யார் என்றே எனக்கு தெரியாது.. எனக்கு அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. தெரிந்தவரிடம் கொடுத்துதான் இப்படி பேசச்சொன்னேன்.. அதற்கும் மன்னிப்பு கேட்கிறேன்.. பொதுவெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த இளைஞர் கூறினார்.