» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 2, அக்டோபர் 2024 4:24:59 PM (IST)
கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு சமுதாய நலக்கூடத்தில் அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி, இன்று (02.10.2024) நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிதிட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து கிராம மக்களிடையே மாவட்ட ஆட்சியர் பேசுகையில் : அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ம் தேதியன்று ஒவ்வொரு கிராம ஊராட்சி பகுதிகளில் இதுபோன்ற கிராம சபைகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் செண்பகராமன்புதூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கிராம சபைக்கூட்டதில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அதனைத்தொடர்ந்து தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையான அட்டை வழங்குவது, அவர்களுக்கு முகாம்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் குறித்தும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் மூலம் அனைத்து வீடுகளுக்கு தூய்மை காவலர்கள் சென்று குப்பைகளை மட்கும் மட்கா குப்பைகள் என தரம் பிரத்து வழங்குவது குறித்தும், மாகத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
செண்பகராமன்புதூர் ஊராட்சியில் 17 குக்கிராமங்களில் மொத்தம் 6500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 5 அங்கன்வாடி மையங்கள், 3 தொடக்கப்பள்ளிகள், 1 உயர்நிலைப்பள்ளி, 1 மேல்நிலைப்பள்ளி, 3 கல்லூரிகள், கால்நடை மருந்தகம், தபால் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், காவல்நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளன.
நம்முடைய ஊராட்சியை சார்ந்தவர்கள் பலர் வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளார்கள். செண்பகராமன்புதூர் ஊராட்சியில் மொத்தம் 41 சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 426 உறுப்பினர்கள் உள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தி வருகிறார்கள். நம்முடைய பிள்ளைகளை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம்முடைய கடமையாகும். முக்கியமாக 13 அல்லது 14 வயது பிள்ளைகள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகின்றனர்.
ஒவ்வொருவரும் முதலில் நண்பர்களோடு பொழுதுபோக்காகவும், விளையாட்டுத்தனமாகவும் போதைப்பொருட்களை உட்கொள்ள தொடங்கி தொடர்ந்து அப்போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றார்கள். ஒரே ஒரு தடவை, இன்று ஒரு நாள் மட்டும் என்று எதார்த்தமாகவோ, வற்புறுத்தப்பட்டோ போதை பொருட்களை உபயோகிப்பதினால் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பாக சொல்லி போதைப்பொருட்கள் பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடைகளில் விற்க கூடாது என்று அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் போதைப்பொருட்கள் விற்பது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இரத்த வங்கி, போதிய மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், அனைத்து உபகரணங்கள் கொண்ட அறுவை சிகிச்சை அறை, பிரசவ அறை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு வசதி, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு, 24x7 நேரமும் இயங்கி வருகிறது.
கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்தே கருவுற்ற தாய்மார்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 1000 நாட்கள் என்பது முக்கியமான காலமாகும். எனவே அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா குழந்தை நல பெட்டகம், 102 அரசு இலவச ஊர்தி வசதி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, 24 மணி நேர பிரசவ சேவை, அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி திட்டங்கள் வாயிலாக நலத்திட்ட உதவிகள், மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க பெறுகின்றன. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் படிப்பிற்கு 7.50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ள மாணவர்களும் தங்களது கனவான மருத்துவம் மற்றும் பொறியில் துறையில் சிறந்து விளங்க வழிவகை செய்கிறது. மேலும் புதுமைப்பெண்திட்டம், தமிழ்புதல்வன் ஆகிய திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் ரூ.1000 மாணவ மாணவியர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லமால் நான்முதல்வன் திட்டத்தின் வாயிலாக புதிய தொழில்முனைவோருக்கான தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் அனைவரும் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையிலும், பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகளின் தொழில்விருத்தியடையவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளை நேரில் அணுகி அத்துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
அதனைத்தொடர்ந்து ஆட்சியர் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி மற்றும் எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து சமுதாய முதலீட்டு நிதி கடன் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரு.1.40 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளும், நலிவுற்றோர் நிதி கடன் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000 கடன் உதவிகள் வழங்கப்பட்டள்ளது.
கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகமது நசீர், இணை இயக்குநர் (வேளாண்மை) ஆல்பர்ட் ராபின்சன், செண்பகராமன்புதூர் ஊராட்சிமன்ற தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), கீதா (வோளண்மை விற்பனை குழு), சில்வெஸ்டர் சொர்ணலதா (வேளாண் பொறியியல் துறை), மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயமீனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, சேகர், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜகுமார், உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.