» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் அணு கனிம சுரங்கங்கள் அமைக்க கூடாது - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 12:28:44 PM (IST)

கன்னியாகுமரியில் அணு கனிம சுரங்கங்களை அமைக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம், கீழ்மிடாலம், புத்தன்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (Indian Rare Earths Limited) நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

கிள்ளியூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அணு கனிம சுரங்கங்களின் மூலம், இயற்கையாகவே அதிக கதிரியக்க தன்மை கொண்ட கிராமங்கள் அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் இத்திட்டத்திற்கு அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஏற்கனவே கடலரிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடற்கரையோடு, கடல்பகுதியின் வளமும் பெருமளவு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிரான குரலை எழுப்பியுள்ளனர்.

எனவே, அணு கனிம சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கும், மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory