» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் 5 கிராமங்களில் கனிமங்கள் எடுக்க அனுமதி : மீனவர்கள் கடும் எதிர்ப்பு

வெள்ளி 20, செப்டம்பர் 2024 8:38:04 AM (IST)

குமரியில் 5 கடற்கரை கிராமங்களில் மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்க அனுமதி அளித்துள்ளது தொடர்பாக வருகிற 1-ந் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான அரிய வகை மணல் ஆலை (ஐ.ஆர்.இ.எல்.) நிறுவனம் 1965-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் குமரி மாவட்ட கடற்கரை மணலில் இருந்து அரியவகை கனிமங்களை பிரித்தெடுத்து வருகிறது. அந்த வகையில் மோனசைட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், கார்னெட் ஆகியவற்றை பிரித்தெடுக்கிறது. 

இந்த ஆலையில் பிரித்தெடுக்கப்படும் அரியவகை கனிமங்கள் கம்ப்யூட்டர், செல்போன், பல்வேறு மின்னணு சாதனங்கள், விமான பாகங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சாதன உதிரிபாகங்கள், பெயிண்ட், செராமிக்ஸ் டைல்ஸ், காகிதம், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. 

இந்தநிலையில் குறும்பனை முதல் நீரோடி வரையில் 1,144.0618 எக்டேர் அளவு நிலப்பரப்பில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு இந்திய அரிய மணல் ஆலைக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 1-ந் தேதி தக்கலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவல் மீனவ மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு வந்தபோது மீனவ மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும், மீனவ சங்கங்களும் இதற்கான எதிர்ப்பை மனுக்கள் மூலமாகவும், போராட்டங்கள் வாயிலாகவும் தெரிவித்தனர். இந்தநிலையில் தற்போது கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அந்தோணி, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் சகாயபாபு, பொருளாளர் பிராங்கிளின் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் குறும்பனை முதல் நீரோடி வரை 1,144.0618 எக்டேர் அளவு நிலப்பரப்பில் கனிமங்கள் பிரித்தெடுப்பதற்கான அனுமதி இந்திய அரிய மணல் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வருகிற 1-ந் தேதி அன்று நடைபெற உள்ளது என்ற செய்தி கடற்கரையில் வாழும் மக்களுக்கு பேரதிர்ச்சியையும், பெரும் அச்சத்தையும் உண்டாக்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த அறிவிப்பு வந்த போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கருத்துக் கேட்பு கூட்டத்தை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி அறியாதவர்கள் அல்ல மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள். இது கடற்கரை சார்ந்த மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகச் செயலாகும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளான கீழ்மிடாலம் (ஏ), மிடாலம் (பி), இனயம்புத்தன்துறை (பி), ஏழுதேசம் (ஏ.பி.சி.), கொல்லங்கோடு (ஏ.பி.) ஆகிய வருவாய் கிராமப் பகுதிகளில் இத்திட்டத்திற்கு ஏற்ற சூழல் உள்ளதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

காரணம் இந்த பகுதிகளில் மணல் எடுப்பதற்கான மணல் மேடுகள் எங்கும் இல்லை. கடற்கரை கிராமங்களில் மக்கள் வாழ்விடங்கள் மிக,மிக நெருக்கானவை. ஏற்கனவே கடலரிப்பால் அனைத்து கிராமங்களும் பாதிக்கப்பட்டு கடற்கரை என்பதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கடலும், குடியிருப்புகளும் அடுத்தடுத்து உள்ளது.

நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி உள்ளாட்சி அமைப்புகள் எப்போதாவது விடும் தண்ணீரை மட்டுமே நம்பியிருக்கும் சூழலே அனைத்து கடலோரக் கிராமங்களின் நிலையாகும். கடற்கரை இணைப்புச் சாலைகள் பல ஊர்களில் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளதால் வடக்கே வெகுதூரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. மேலும் அனைத்துக் கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு மீன்பிடித் தங்குதளங்கள் முழுவதும் கடலுக்குள்ளே போகும் நிலை உள்ளது.

இதுதவிர புற்றுநோய் போன்ற கொடிய உயிர்கொல்லி நோய்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மணலில் இருந்து பிரிக்கப்படும் கனிமங்களின் கதிர் விச்சால் மீனவர்களின் சந்ததியினர்கள் நிரந்தர நோயாளிகளாக மாறும் நிலை உருவாகும்.

எனவே தாங்கள் கடலோர மக்களின் இந்த பெரும் பிரச்சினையின் உண்மைத் தன்மையை உணர்ந்து கடலோர மக்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் அரியவகை மணல் ஆலை நிறுவனத்திற்கு மணல் எடுக்க கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory