» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதை தடுப்பு குழுக்களின் பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: டிஐஜி மூர்த்தி வழங்கினார்
ஞாயிறு 10, நவம்பர் 2024 9:57:56 AM (IST)
நாகர்கோயிலில் நடைபெற்ற கல்லூரிகள் அளவிலான போதை தடுப்பு குழுக்கள். குறித்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட பயிற்றுனர்களுக்கு காவல்துறை சரக துணைத் தலைவர் பா. மூர்த்தி சான்றிதழ்களை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதை தடுப்பு குழுக்களை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நாகர்கோவிலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை சரக துணைத் தலைவர் பா. மூர்த்தி பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக காலையில் நடைபெற்ற துவக்க விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையுரை ஆற்றினார்.
எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்களின் செயல்பாடுகளைப் பற்றி கூறியதாவது: போதைக்கு எதிரான தடுப்பு குழுக்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 256 கல்லூரிகளில் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதை தடுப்பு குழுக்கள் சேர்ந்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் போதை தடுப்பு செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் நவம்பர் மாதத்திற்குள் மற்ற இரண்டு மாவட்டங்களிலும் இந்த பயிற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரியிலும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறை புகையிலை தடுப்பு பிரிவு மருத்துவர் ஆன்சி போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி படக் காட்சிகள் மூலம் விளக்கி கூறினார். கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஜான் பால் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் மனதிற்கும், உடலுக்கும் ஏற்படும் தீங்குகளைப் பற்றி எடுத்துரைத்தார். கன்னியாகுமரி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக டீன் நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் சேவியர் மற்றும் போதை தடுப்பு குழுக்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை, தீபக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.