» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார்!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 4:10:19 PM (IST)
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன், உடல்நலக் குறைவால், சென்னையில் இன்று காலமானார்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் (76), நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். செப்டம்பர் 3-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
சிறு வணிகர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் குரல் கொடுத்தவர். சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு, பெப்சி - கோக் எதிர்ப்பு, தாமிரபரணி பாதுகாப்பு, ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு, ஈழ விடுதலை உள்ளிட்ட பொதுநலன் சார்ந்த மக்கள் பிரச்சனைகளில் முன்னின்று போராடியவர் வெள்ளையன்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, வணிகர் தங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளையன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.