» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிம வளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் படுகொலை: சீமான் கண்டனம்

திங்கள் 20, ஜனவரி 2025 5:19:49 PM (IST)

கனிம வளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அமெச்சூர் கபடி கழகச் செயலாளருமான சகோதரர் ஜகபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு சகோதரர் ஜகபர் அலியின் படுகொலையே மற்றுமொரு சான்றாகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாக சீரழிந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதிலும், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும் அதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகளிலும் தான் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறிநிற்கிறது.

தி.மு.க. ஆட்சியில் பெண்கள் - குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஏன் தமிழ்நாடு காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் பெருங்கொடுமை.

கடந்த 2023ம் ஆண்டு மணற்கொள்ளையை தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது முதல், கடந்த ஆண்டு கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடிய திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளது வரை அடுத்தடுத்து படுகொலைகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன.

சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் தி.மு.க. ஆட்சியில் சமானிய மக்களின் நிலை என்ன? கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்களை அரசே கைது செய்வதும், கூலிப்படைகள் மூலமாக கொல்லப்படுவதும் தொடர்கதையாகிவிட்ட தி.மு.க. ஆட்சி மக்களுக்கானதா? அல்லது கனமவளக் கொள்ளையர்களுக்கானதா? அரசு அலுவலர் முதல் சமூக ஆர்வலர்கள் வரை உண்மையும் நேர்மையுமாக மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா? என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் சகோதரர் ஜகபர் அலி மீது வாகனம் ஏற்றி படுகொலை செய்த குற்றவாளிகளையும், அதன் பின்னணியில் சதிபுரிந்த கனிமவளக்கொள்ளையர்கள் அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory