» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

சனி 13, ஆகஸ்ட் 2022 10:49:29 AM (IST)

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

ஆனால் இங்கோ, சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களைச் சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள். சமீபத்தில் சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி, சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தது.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருடன் நமது மாநில துணைத் தலைவர் எம்சி சம்பத், ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பிறகு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

24 மாவட்டங்களில் ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர்களின் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory