» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய்க்குட்டி கீறியதால் விபரீதம்: பெண் உயிரிழப்பு!

புதன் 15, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)

தூத்துக்குடி அருகே, வளர்ப்பு நாய் கீறியதில் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே, சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகனின் மனைவி சுமதி (47). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது அந்த நாய்க்குட்டியை சிகிச்சைக்காக சுமதி தூக்கிச் சென்றபோது, அவரது தோளில் நாயின் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டது.

நாய்க்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்ததால், சிறிய நகக்கீறல் தானே என்று கருதி சுமதி அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், நிலைமை மிகவும் கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைக்காகத் திங்கள்கிழமை மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுமதியின் உடல் சில்லாங்குளம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ரேபிஸ் என்பது ஒரு தொற்றுநோய் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ அல்லது கீறினாலோ முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.


மக்கள் கருத்து

SrrriApr 17, 2026 - 12:30:51 AM | Posted IP 162.1*****

இந்த நாய் எல்லாம் தேவையா

Nan thanApr 15, 2026 - 12:42:12 PM | Posted IP 104.2*****

Vari katta soluvanga ana naai poonai valakka permission vanganum nu orithanum sola matan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory