» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)
கூட்டுறவு வங்கி மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதால் குரும்பூர் பகுதியில் நடக்க இருந்த அமைச்சரின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. மேலும் குரும்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2021 செப்.8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டபோது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும், இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். மோசடியில் ஈடுபட்ட வங்கி செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்ற ஜாமீனியில் வெளியே உள்ளனர்.
இந்த மோசடி நடந்து 5 வருடங்களுக்கு மேலாகியும் பணமோ, நகையோ மீட்டு தரவில்லை என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த பிப்.22ம் தேதி வங்கியை முற்றுகையிட்டு பூட்டுப்போட்டனர். இந்நிலையில் குரும்பூர் கூட்டுறவு வங்கி நகை பணம் மீட்புக்குழு சார்பில் குரும்பூர் பஜார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், குரும்பூர் கூட்டுறவு வங்கி மோசடி விவகாரத்தில் தமிழக அரசோ, கூட்டுறவு துறையோ, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அங்கமங்கலம், நாலுமாவடி, புறையூர், ராஜபதி, சேதுக்குவாய்த்தான், சுகந்தலை, வரண்டியவேல், நல்லூர், அழகப்பபுரம், வீரமாணிக்கம், மேலப்புதுக்குடி மற்றும் கச்சினாவிளை கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் குரும்பூர் மெயின் பஜார், பரதர் தெரு, அருந்ததியர் காலனி, முஸ்லீம் தெரு, அன்பு நகர், அங்கமங்கலம், கோட்டார்விளை போன்ற பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குரும்பூர் கூட்டுறவு வங்கி மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாரத்திற்கு குரும்பூர் பகுதிக்கு வரும் அமைச்சரை முற்றுகையிடப்பபோவதாக முடிவு செய்தனர். இதுகுறித்த தகவல் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்ததும் குரும்பூர் பகுதியில் நடக்க இருந்த அமைச்சரின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புறையூர் முஸ்லீம் தெருவில் அமைச்சரின் பிரசாரம் துவங்கியது. அமைச்சரின் பிரசாரம் ரத்தான தகவலால் குரும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)







