» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டூ கொல்கத்தா: முதன்முறையாக ரயிலில் பறந்தது பட்டாணி - மதுரை கோட்டம் புதிய சாதனை!

வெள்ளி 27, மார்ச் 2026 8:08:36 AM (IST)



மதுரை ரயில்வே கோட்டம் 2025-2026-ம் நிதியாண்டிற்கான சரக்குக் கையாளுதல் இலக்கை, நிதியாண்டு முடிவதற்கு முன்பே எட்டிப் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட சரக்கு நிலையங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.

நடப்பு நிதியாண்டில் (2025-2026) 3.5 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள மதுரை ரயில்வே கோட்டம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக தூத்துக்குடி மீளவிட்டான், வ.உ.சி. துறைமுகம், ஸ்பிக் உரத் தொழிற்சாலை உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள சரக்கு நிலையங்கள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சாதனையில் தூத்துக்குடி மாவட்டம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது: முதன்முறையாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து கொல்கத்தாவிற்கு அதிக அளவில் பட்டாணி சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. வாரணாசி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்குத் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் மைசூர் பருப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து மேற்கு மத்திய ரயில்வேக்குப் பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இத்தகைய தொடர் முயற்சிகளால், கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் 3.5 மில்லியன் டன் என்ற இலக்கை மதுரை கோட்டம் எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து

தூத்துக்குடிக்காரன்Mar 27, 2026 - 01:38:06 PM | Posted IP 162.1*****

மிகச்சிறப்பு. ஆனால் பயணிகள் ரயில் வசதிகளை பொறுத்தவரையில் தூத்துக்குடி மிகவும் பின்தங்கியுள்ளது. பயணிகள் நலச்சங்கம் வந்தே பாரத் ரயில் மற்றும் மும்பை ரயிலை தூத்துக்குடிக்கு கேட்பதில் காட்டும் ஆர்வத்தை (இந்த இரண்டு ரயில்களும் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை), நமக்கு அடிப்படை தேவையான தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு காலை நேரத்தில் நேரடி ரயில் வசதி இல்லை என்பதை மனதில் கொள்ளவேண்டுமென்பது எனது விருப்பம். 56721/56722 திருநெல்வேலி-தூத்துக்குடி-திருநெல்வேலி பயணிகள் ரயிலின் பெட்டிகளை வைத்து தூத்துக்குடி-மதுரை-தூத்துக்குடி பயணிகள் ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் முயற்சி எடுத்தால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறுவர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory