» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புயல், மழை வெள்ளத்தில் பயிர்களை பாதுகாத்திட நடவடிக்கைகள்: ஆட்சியர் அறிவுறுத்தல்!

வியாழன் 4, டிசம்பர் 2025 4:04:05 PM (IST)

வடகிழக்கு பருவமழை டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 92 ஏக்கர் நெற்பயிர் மற்றும் 104 ஏக்கரில் இதர பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணித்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறை அலுவலர்களால் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். பூச்சி நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நெற்பயிரில் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மஞ்சள் நோய்) காணப்பட்டால் 2 கிலோ பூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும்.

மேலும், வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், பசுந்தாள் உரப்பயிர்களை அதிக அளவில் பயன்படுத்தி யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவலர்களுக்குத் தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தோட்டக்கலைப்பயிர்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல், ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டுக் கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிர்களில் அதன் தலைப்பகுதியின் சுமையை (மட்டை, ஓலை) குறைத்து காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். 

பசுமைக்குடில், நிழல்வலைக்குடில்களில் அதன் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். சூரிய சக்தியினால் இயங்கும் பம்ப்செட்டுகளில் சோலார் பேனல்கள் அகற்றப்பட அல்லது அதன் சாய்வு கோணத்தினை 00 ஆக மாற்றி வைக்க வேண்டும், சூரிய சக்தி மின் வேலி அமைப்பின் சுவிட்சினை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory