» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் : பொதுமக்கள் அவதி
ஞாயிறு 30, நவம்பர் 2025 9:59:22 AM (IST)

தூத்துக்குடியில் தொடர் மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
‘தித்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகர், தனசேகரன்நகர், குறிஞ்சி நகர், ராஜீவ்நகர், கதிர்வேல் நகர், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்டபகுதிகளில் மழைநீர் 2 அடி ஆழத்துக்கு தேங்கி வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட நால்வர் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கே.டி.சி.நகர் ஹவுசிங் போர்டு சாலை பகுதி முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் மழைநீர் கருப்பு நிறமாக மாறி குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது.
துர்நாற்றம் வீசி வரும் இந்த மழைநீரினால் சுகாதாரக்கேடாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள சாலை, சுந்தரவேல்புரம் மேற்கு சாலை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து மேற்கு காமராஜர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. வீடுகளை சுற்றி மழைநீர், குளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
அதுபோல் கே.வி.கே.சாமி நகர் பகுதியிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை தங்கள் பகுதியிலிருந்து மழை நீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்கள் பகுதியில் மழைநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி, சாலை வசதி இல்லாததன் காரணமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து தாங்கள் மழை காலங்களில் 3 மாதங்கள் இவ்வாறு மழைநீர் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் நிலைமை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மூலம் மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் கூடுதலாக மின் மோட்டார்கள் அமைத்து நீரை வெளியேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)










80s kidNov 30, 2025 - 10:40:43 PM | Posted IP 162.1*****