» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தங்கு தடையின்றி செயல்பட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 20, நவம்பர் 2024 5:36:37 PM (IST)
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தினார்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்து 31.01.2024 அன்று தொடங்கி வைத்தார்கள்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம், மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடிஉங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (20.11.2024) கோவில்பட்டி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதன்படி, கோவில்பட்டி வட்டம், சிவந்திபட்டி ஊராட்சி சிவந்திபட்டியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.4.25 இலட்சம் மானியத்தில் ரூ.9.25 இலட்சம் மதிப்பிலான டிராக்டரினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை போன்ற முக்கிய துறைகளின் வாயிலாக செயல்படுத்தும் அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் சிவந்திபட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.39.95 இலட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் கிராம செயலகக் கட்டட கட்டுமானப் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கிழவிபட்டி விலக்கில் கோவில்பட்டி முதல் ஓட்டப்பிடாரம் செல்லும் சாலையில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தினையும், கிழவிபட்டி கண்மாயினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், திட்டங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், குலசேகரபுரம் பகுதியில் சுமார் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையினை பார்வையிட்டு, அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு கட்டடத்தின் கட்டுமான பணிகளையும், கோவில்பட்டி வேளாண்மைத்துறை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தினையும், இனாம்மணியாச்சி ஊராட்சி சீனிவாசக நகர் மற்றும் இந்திராநகர் போன்ற பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர், கோவில்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் பார்வையிட்டு கல்லூரியில் செயல்பட்டுவரும் பாடப்பிரிவுகள், மாணவர்களின் எண்ணிக்கைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்து, விளையாட்டு மைதானத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வளைகோல் பந்து விளையாட்டு மைதானம், வளைகோல் பந்து சிறப்பு விளையாட்டு விடுதினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விளையாட்டு வீரர்களுடன் இதுவரை பங்கு பெற்ற விளையாட்டுப்போட்டிகளின் அனுபவங்கள் குறித்து கலந்துரையாடி 33 மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், ஐஸ்பேக், வாட்டர் பாட்டில், டவல் மற்றும் பேக் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சாம்பியன் கிட்டினை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 06 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு விசை களையெடுக்கும் கருவி மற்றும் இடுபொருட்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கஸ்துரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், செயற்பாறியாளர் (வேளாண்மை பொறியாளர்) கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மை இணை இயக்குநர்(பொ) மனோரஞ்சிதம், உதவி செயற்பாறியாளர் (வேளாண்மை பொறியாளர்) சங்கரநாரயணன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் (கோவில்பட்டி) எபினேசர், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.