» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோடி நாளை குமரி வருகை: விவேகானந்தர் மண்டபத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
புதன் 29, மே 2024 5:43:28 PM (IST)
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை தர உள்ள நிலையில், விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் செல்லும் பாதையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் வரும் ஹெலிகாப்டர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள தளத்தில் வந்து இறங்குகிறது. அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தேனீர் அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன் பிறகு மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்கு உள்ள தியான மண்டபத்தில் நாளை மாலை முதல் 1-ந் தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து தியானம் செய்கிறார்.
பின்னர் 1-ந்தேதி மாலை படகில் கரைக்கு திரும்புகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளத்தில் இன்று முதலே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைந்து உள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி செல்லும் பாதையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் பாதையில் 6 இடங்களில் போலீசார் கூடாரம் அமைத்து மெட்டல் டிடெக்டர் வாசல் மூலம் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரியில் பிரதமர் ஓய்வெடுக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய மற்றும் புதிய அரசு விருந்தினர் மாளிகைகள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி,கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
அதேபோல பிரதமர் மோடி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் விவேகானந்தர் ராக் ரோடு ஆகிய பகுதிகள் இரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை 8 மணிக்கு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து தியானம் செய்வதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு தடங்கல் இன்றி மின்சாரம் விநியோகம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதற்காக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு மின்விநியோகம் செய்து வரும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள 250 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி நடந்தது. பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு பயணம் செய்வதற்காக தனிபடகு புது பொலிவுடன் தயாராகி வருகிறது. இந்த படகில் இரவு-பகலாக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சீரமைப்பு பணியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.