» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்!

புதன் 24, ஏப்ரல் 2024 11:36:25 AM (IST)

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜ.க. மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு மீண்டும் நாளை சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு நேரில் ஆஜராகும்படி தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பவுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory