» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கரிசல் பூமி விவசாயிகளின் பொன் ஏர் திருவிழா
திங்கள் 15, ஏப்ரல் 2024 10:17:23 AM (IST)
தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தை முன்னிட்டு கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் பொன் ஏர் பூட்டும் திருவிழா கொண்டாடப்பட்டது,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டம் பிதப்புரம் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான பசுக்கள், மற்றும் காளை மாடுகளை ஊரணிகளில் குளிப்பாட்டி கொம்புகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டும், டிராக்டர்களை கழுவி மஞ்சள் பூசியும், ரிப்பன் பலூன் கட்டியும் வீடுகளுக்கு முன்பு பூஜை பொருட்கள், விதை, வித்துக்கள் வைத்து சூடமேற்றி வரக்கூடிய பருவ ஆண்டில் நல்ல மழை அளவோடு பெய்து சிறப்பாக விளைந்து நல்ல மகசூல் கிடைக்கவும்,
நிலங்களில் பணிபுரியும் போது விஷ ஜந்துக்கள், விவசாய பணிக்கு பயன்படுத்தும் போது ஆயுதங்களால் கவனக்குறைவாக எதுவும் தவறு நேராமல் இருக்கவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு, நீர், சுகாதாரம், அமைதி கிடைத்திடவும் பூஜை செய்து வழிபாடு செய்த பின் ஒன்றாக வீடுகளில் இருந்து உழவு மாடுகள் அதனை தொடர்ந்து டிராக்டர்கள் புடை சூழஊர் பொது நிலத்தில் வடக்கில் இருந்து தெற்காக ஏர் பூட்டி உழவு செய்தனர்.
பொன் ஏர் திருவிழா முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளுக்கு வீடுகளில் தாய்மார்கள் பாதம் கழுவி மஞ்சள் மற்றும் குங்குமிட்டு பூஜை செய்துஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் சம்பிரதாய வழக்கப்படி களைப்பாக வந்த விவசாயிகளுக்கு பானக்காரம் எனப்படும் புளிக்கரைசல் மற்றும் வெல்லம் கலந்த பானம் வழங்கினர்.
இந்கழ்ச்சிக்கு கிராமத் தலைவர் ராமசுப்பு, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன். மூத்த விவசாயிகள் ஞானசேகர், மாரிக்கண்ணன், பாபுராஜ், பரமானந்தம், தங்கவேலு உள்பட ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்