» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட நடவடிக்கை: மதுவிலக்கு சபை கோரிக்கை!
திங்கள் 12, பிப்ரவரி 2024 12:35:40 PM (IST)
தமிழகம் முழுவதும் புனித வெள்ளியன்று (மார்ச் 29) டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரிசுத்த அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு : கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் வருகின்ற புதன்கிழமை தொடங்க உள்ளது. இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு இறந்த நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக கிறிஸ்தவ மக்கள் அனுசரித்து வருகின்றனர்.
நாற்பது நாட்களும் தவசு நாட்களாக அனுசரித்து இயேசு இறந்த அந்த புனித வெள்ளியான துக்க நாளை அகில உலகில் பல்வேறு நாடுகளிலும், மத்திய அரசும், தமிழ்நாடு அரசும், பொது விடுமுறையாக அறிவித்து வருகிறது. அன்றைய தினம் புனித வெள்ளி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிடப்பட வேண்டுமென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட சபையினர் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு சபைகளும் கடந்த வருடம் அதே வேண்டுகோளை கேட்டு இருந்தோம். போதிய நாட்கள் இல்லாததால் செயல்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.