» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை சார்பாக குறும்படங்கள் வெளியீடு!

புதன் 1, பிப்ரவரி 2023 9:59:48 AM (IST)



தூத்துக்குடி  மாவட்ட காவல்துறை சார்பாக "மூன்றாம் கண்” மற்றும் "அல்வா” என்ற விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பொறுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட "மூன்றாம் கண்” என்ற குறும்படத்தையும், சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "அல்வா” என்ற குறும்படத்தையும் ராஜ் மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இடையூறாக இருப்பது அறியாமை, ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டு அதன் பின் அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்தால்  நிச்சயமாக எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டார்கள், எனவே குற்ற செயலில் ஈடுபட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பகள் என்ன என்பதை பொதுமக்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும், வாழ்க்கையில் நான் பெரியவர், நீ பெரியவர் என்று போட்டி போடுவதை விட அவர்களிடம் அன்புடனும் சகோதரத்துவத்துடனும் பழகி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போய் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 

இதனால் தேவையற்ற சண்டை, சச்சரவுகளை தவிர்த்து நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி முன்னேற முடியும். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் பொது மக்களிடையே "மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  அதன் மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவரும் ஜாதி மத பேதம் இன்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் இருக்க வேண்டி தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

மேலும் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா மூலம் நடந்த குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கவும், சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளில் குற்றங்கள் நடவாமல் தடுக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். அதன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மூன்றாம் கண் குறும்படம் அமைந்துள்ளது என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்க தலைவர்  சாம்ராஜ் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.  சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக  தர்மராஜ்,  பிரான்சிஸ்,  இம்ரான்கான் மற்றும்  செங்குட்டுவன் ஆகியோரும் பங்கேற்றனர். தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர்  மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory