» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரவுடி கொலை வழக்கில் 6பேர் கைது - வாகனங்கள் எரிப்பு - போலீஸ் குவிப்பு

திங்கள் 30, ஜனவரி 2023 8:12:06 AM (IST)

தூத்துக்குடியில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை எதிரொலியாக ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் சிவன் கோவில் அருகே ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கருப்பு என்ற கருப்பசாமி (27). இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இவருடைய பெயர் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு சங்கரப்பேரியைச் சேர்ந்த அங்குசாமி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கருப்பு என்ற கருப்பசாமியும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் அங்குசாமியின் குடும்பத்தினருக்கும், கருப்பு என்ற கருப்பசாமிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அங்குசாமியின் உறவினர் முத்துகிருஷ்ணன் மகன் கருப்பசாமி (26) என்பவர் தனது வீட்டின் முன்பு காரை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கருப்பு என்ற கருப்பசாமியும், அவரது நண்பர் உத்தண்டு முருகனும் (25) சேர்ந்து, காரை கழுவிக் கொண்டிருந்த கருப்பசாமியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அடிதடி, மோதல் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து விலக்கி விட்டனர். இதையடுத்து கருப்பு என்ற கருப்பசாமி, தெற்கு சங்கரப்பேரியில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு நண்பர் உத்தண்டு முருகனுடன் சென்றார். அங்கு பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கருப்பசாமி, அவரது அண்ணன் உத்தண்டு ரமேஷ் (31), அங்குசாமியின் மகன் உத்தண்டு (19) உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல், கருப்பு என்ற கருப்பசாமி இருந்த அவரது மாமியார் வீட்டுக்குள் புகுந்தது. இதை பார்த்ததும் சுதாரித்து எழுந்த கருப்பு என்ற கருப்பசாமியை அந்த கும்பல் கீழே தள்ளி சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தடுக்க வந்த உத்தண்டு முருகனுக்கும் வெட்டு விழுந்தது.

அப்போது உத்தண்டு முருகன் பதிலுக்கு தாக்கியதில் அங்குசாமி தரப்பினர் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. மோதலில் காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கருப்பு என்ற கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக கருப்பசாமி, அவரது அண்ணன் உத்தண்டு ரமேஷ், அங்குசாமி மகன் உத்தண்டு, தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்த வீரபாண்டியன் என்ற ரவீந்திரன் (40), முத்துராஜ் என்ற ராசு (35), கோமதிபாய் காலனியை சேர்ந்த வேல்சாமி (24) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அந்த வார்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த பயங்கர மோதலை தொடர்ந்து கருப்பு என்ற கருப்பசாமியின் உறவினர்கள், நண்பர்கள் சங்கரப்பேரி அருகே உள்ள டயர் வல்கனைசிங் கடையை அடித்து சேதப்படுத்தினர். அதன் முன்புள்ள ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 2 லோடு ஆட்டோக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் சங்கரப்பேரியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory