» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவர்களுக்கு மானிய விலையில் இயந்திரங்கள்: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கல்!

சனி 12, ஜூன் 2021 5:52:26 PM (IST)



அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்களை மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிங்கிதுறையில் 5 மீனவர்களுக்கும், கொம்புதுறையில் 5 மீனவர்களுக்கும், அமலிநகர் மீனவர்கள் 8 நபர்களுக்கும், ஆலந்தலை மீனவர்கள் 7 நபர்கள் என மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான வெளிப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார்.


பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட வேண்டும். பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கும், மீனவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். இதற்கான திட்டங்களை தீட்டுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் சென்னையில் உள்ளதை போல தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் சில்லறை மீன் விற்பனை நிலையங்கள் நவீன முறையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

நாட்டு படகுகளையும் பாதுகாப்பான முறையில் நிறுத்த சென்னையில் உள்ளதைப்போல இங்குள்ள பல்வேறு பகுதியில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனால் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரது குடும்பத்திற்கு ஏதாவது அரசு இழப்பீடுகள் கிடைக்கும். இதை மாற்றி உள்ளுர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கேரண்டியுடன் 3 மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார்கள்.

மீனவர்கள் தங்கள் பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் தங்களுக்குள் பேசி வைத்து குறைந்த விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை கிடைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மீன்களை அந்தந்த பகுதியில் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பசுமை திட்டம் இருப்பதை போல மீனவர்களுக்கு நீலத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இன்று மீனவர்களுக்கு முழு விலை ரூ.134784 இதில் பயனாளிகள் கட்ட வேண்டிய தொகை ரூ.86784, அரசு மானியம் 40 சதவிதம் ரூ.48000 மானியத்தில் வெளிப்பொறுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இயந்திரங்களை மானிய விலையில் மீனவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பெற முடியும். இதையும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமலிநகர் மீனவர் கிராம பகுதியில் ரூ.43 கோடி மதிப்பிலும், சிங்கிதுறை மற்றும் கொம்புதுறை மீனவர் கிராமங்களில் ரூ.28 கோடி மதிப்பிலும், இனிக்கோநகர் மீனவர் கிராம பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பிலும், விவேகானந்தர் மீனவர் காலணி பகுதியில் ரூ.2.70 கோடி மதிப்பிலும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பிடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பிட்டில் ஒருங்கிணைந்த மீன்வளம் அலுவலகம் கட்டும் பணிக்கும், மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.3.11 கோடி மதிப்பிட்டில் புதிதாக மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பிடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகளுக்கு ஒப்புதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் பயன்படுத்தும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் அளவினை அதிகரித்து தரப்படும் என அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கு நவீன முறையிலான திட்டடங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக வாழ வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து திருச்செந்தூர் கோட்டம் காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ரூ.4.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 25 கேவிஎ திறனுடைய புதிய மின்மாற்றியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.மேலும் ஆலந்தலை பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பில் மூலம் ரூ.52 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயலா, காயல்பட்டிணம் ஆணையர் சுகந்தி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் கங்காதரன், மின்சார வாரிய செயற்பொறியாளர் பாக்கியராஜ், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ஜெகன், ராமஜெயம், செங்குளி எ.பி.ரமேஸ், வால்சுடலை, எஸ்.ஐ.காதர், முத்துமுகம்மது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரகுபதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory