» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கமலா - டிரம்ப் இடையே கடும் போட்டி: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!!

செவ்வாய் 5, நவம்பர் 2024 12:54:54 PM (IST)

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 

அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், முதலில் ஹாம்ப்சைர் மாகாணத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்கி நாளை காலை ஐந்தரை மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். 

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.கடந்த சில மாதங்களாக அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் களைகட்டின.

இதில் கமலா, டிரம்ப் இருவருக்குமே ஆதரவுகள் குவிந்தன. இதனால், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கான போட்டி காணப்படுகிறது. யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அமெரிக்காவில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க மாட்டார்கள். தங்கள் மாகாண பிரதிநிதிகளுக்கு வாக்களித்து தேர்வு செய்வதன் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட், பிரதிநிதிகள் அவை என இரு அவைகள் உள்ளன. இதில் மேலவையான செனட்டில் 100 எம்பிக்களும், பிரதிநிதிகள் அவையில் 435 எம்பிக்களும் இருப்பார்கள். இதுதவிர, தலைநகர் வாஷிங்டனுக்கு தனியாக 3 எம்பிக்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தலா 2 செனட்கள் இருப்பார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதிகள் எண்ணிக்கை இருக்கும்.

இந்த 538 இடங்களும் எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுகள் என குறிப்பிடப்படும். இதில் 270க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 17ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் தங்களின் மாகாண தலைநகரில் கூடி அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அதிபருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 2025, ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.

பொதுவாக அதிபர் தேர்தலில் பென்சில்வேனியா, நிவாடா, வட கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களே வெற்றியை தீர்மானிப்பதாக உள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 7.7 கோடி பேர் ஏற்கனவே தபால் மூலமாகவும், நேரடியாகவும் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். 

தேர்தல் நடக்கும் இன்றைய நாளில் மக்கள் கட்டாயம் நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். 50 மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் எண்ணிக்கை உடனே தொடங்கும்.இந்த தேர்தல் முடிவை அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. இஸ்ரேல், காசா, உக்ரைன் போன்ற நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்ட நாடாக அமெரிக்கா இருப்பதால் அதன் அதிபர் தேர்தல் முடிவை உலகமே எதிர்பார்த்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென் கொரியா அதிபர் வெளிநாடு செல்ல தடை!

செவ்வாய் 10, டிசம்பர் 2024 4:49:44 PM (IST)

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory