» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கர்களை மணந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை : அதிபர் ஜோ பைடன் திட்டம்!

புதன் 19, ஜூன் 2024 4:11:28 PM (IST)

அமெரிக்கர்களை மணந்துள்ள அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க அதிபர் ஜோ பைடன் திட்டம் வகுத்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவர்கள், அமெரிக்கர்களின் கணவர் அல்லது மனைவியாக இருந்தால் அவர்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் பிற்காலத்தில் நாட்டின் முழு குடியுரிமையைப் பெற முடியும்.

அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவர்கள் அமெரிக்கர்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால், திங்கள்கிழமைக்கு (ஜூன் 17) பிறகு அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.

அந்த வகையில், ஜூன் 17-ஆம் தேதிக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கர் ஒருவரை மணந்து, 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 3 ஆண்டுகளில் அவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்காக (கிரீன் கார்டு) விண்ணப்பிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு தற்காலிக பணி உரிமமும் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும், பின்னர் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர். அவர்களுடன் சேர்த்து, அமெரிக்கரை மணந்த ஒருவருக்குப் பிறந்து, நாட்டின் குடியுரிமை பெற முடியாமல் உள்ள சுமார் 50,000 சிறுவர் சிறுமியர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் நிரந்தர குடியேற்ற உரிமை பெற முடியும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் அவருக்கு முன்னர் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக அகதிகள் விவகாரமும் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறும் சூழலில், அகதிகள் வரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஜோ பைடன் எடுத்துவரும் அண்மைக் கால நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. அந்த நடவடிக்கைகளுக்கு அவரது சொந்தக் கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் போலவே ஜோ பைடனும் இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அகதிகள் விவகாரத்தில் தனது மிதவாதப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் திட்டத்தை பைடன் வகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் காராசாரமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory