» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிதி முறைகேடு வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 31, மே 2024 12:03:17 PM (IST)

தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டாலர்களை 2016-ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக ட்ரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. 

அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை தான் தற்போது ஜூரிகள் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அறிவித்தனர். இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார். குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ரேஸில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் ட்ரம்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது. 

தீர்ப்பு குறித்து கருத்து கூறிய ட்ரம்ப்  "இது எனக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை. இதை மேற்கொண்ட நீதிபதி ஊழல்வாதி. நமது தேசமே இந்த மாதிரியான மோசடியை இப்போது எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை பழிக்கும் வகையில் பைடன் நிர்வாகம் இதை செய்து வருகிறது. நமது அரசியல் சாசனத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது” என ட்ரம்ப் மிகவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory