» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் நாசவேலை இல்லை: ஈரான் அரசு

வியாழன் 30, மே 2024 4:33:35 PM (IST)



ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில், நாசவேலை குறித்த சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ந்தேதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே அவரது ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது.

இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. அதே சமயம் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதராங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆயுதப்படை அதிகாரிகள் குழுவின் 2-வது அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்த விதம் மற்றும் மீட்கப்பட்ட ஹெலிகாப்டர் பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஆகியவற்றின் அடிப்படையில், நாசவேலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எலக்ட்ரானிக் பொருட்களின் செயல்பாட்டில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், அதே சமயம் விபத்து நடந்த சமயத்தில் கிழக்கு அஜர்பைஜானில் நிலவிய வானிலை குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் மற்றும் உபகரணங்களின் மொத்த எடை ஹெலிகாப்டரின் அதிகபட்ச சுமைதாங்கும் வரம்புக்குள் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்வதற்கு 69 வினாடிகளுக்கு முன்பு வரை, குறிப்பிட்ட அலைவரிசையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானக் குழுவினர் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும், இதனால் ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு அமைப்பில் கோளாறு, அல்லது அலைவரிசையில் குறுக்கீடு ஆகிய சந்தேகங்களும் நிராகரிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory