» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹமாஸின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: நேதன்யாகு திட்டவட்டம்!!

திங்கள் 22, ஜனவரி 2024 5:53:36 PM (IST)

ஹமாஸ் அமைப்பு கூறிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதாகும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இடையில் தற்காலிக போர்நிறுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தனர். இன்னும் 136 பேர் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வந்து பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்தனர். அதில், இஸ்ரேல் தரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு படைகளை வாபஸ் பெறவேண்டும், கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவில் ஹமாஸ் ஆட்சி நிர்வாகத்தை ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றால் பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துவிட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "ஹமாஸின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதாகும். இஸ்ரேல் வீரர்கள் வீழ்ந்துவிடுவார்கள். ஹமாசிடம் சரணடையும் வகையிலான இந்த விதிமுறைகளை முற்றிலும் நிராகரிக்கிறேன். இதை ஏற்றுக்கொண்டால், மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. வெளியேற்றப்பட்டவர்களை எங்களால் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர முடியாது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் நடந்ததுபோன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கலாம்" என்றார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடியில் இருப்பவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் செய்யும்படி அவர்களின் குடும்பத்தினர் ஒருபுறம் வலியுறுத்துகின்றனர். மறுபுறம், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் போரை தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory