» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)
நியூசிலாந்து நாட்டின் பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.
நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அவரது தொழிலாளர் கட்சியை சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமரானார். இந்நிலையில், அங்கு கடந்த மாதம் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலான தேசிய கட்சி கூட்டணி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, இரண்டு சிறிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. கூட்டணி ஒப்பந்தம் இறுதியான நிலையில், அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் நேற்று பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஜெனரல் சிண்டி கிரோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டின் பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. செவ்வாய்கிழமை (இன்று) முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் புதிய ஆட்சியின் 100 நாள் திட்டத்தை விரைவில் தயார் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டணி ஒப்பந்தத்தின்படி, 2 ஆண்டுகளுக்குள் வரி குறைப்பு, 500 போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது,” என்று தெரிவித்தார்.