» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 5 நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் அனுமதி!
சனி 25, நவம்பர் 2023 11:48:54 AM (IST)
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்டு, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று சீனா அறிவித்துள்ளது.
மேலும் சீனாவிற்குள் 15 நாள்கள் விசா இல்லாமல் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சி ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் பரிமாற்றத்தில் வளர்ச்சி மற்றும் வெளி உலகிற்கான உயர் மட்டத் திறப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என அந்நாட்டு வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்குள் நுழைபவர்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்தது. அந்தக் கட்டுப்பாடு இந்த ஆண்டின் துவக்கத்தில் தளர்த்தப்பட்ட நிலையில், சீனா இந்த ஆறு நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி அளித்துள்ளது.
இதற்குமுன் புருநெய், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்திருந்தது. கொரானா தொற்றினால் அந்தச் சலுகையை நிறுத்தி வைத்தது. கொரானா தொற்றுக்குப் பின்னர் புருநெய், சிங்கப்பூருக்கு மட்டும் மீண்டும் அனுமதியளித்தது.
முதல் ஆறு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மக்கள் சீனாவிற்குள் வந்து சென்றுள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனா இப்போது தனது மந்தமான பொருளாதாரத்தை சரி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. சமீபமாக டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் போன்ற பெரிய முதலீட்டாளர்கள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கச் சீனா வருவது நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.