» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காஸாவில் நடக்கும் குற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்: ஈரான் அதிபர்!
செவ்வாய் 7, நவம்பர் 2023 12:21:43 PM (IST)
"காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி அழைப்பின் போது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வலியுறுத்தியுள்ளார்.
இருநாட்டு தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குறித்து ஈரானிய அரசு வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரானிய அதிபர் இந்தியா மேற்குலக நாடுகளின் காலனியத்துக்கு எதிராக போராடியதையும் ஒத்துழையாமையை உலகுக்கு அளித்த நாடு என்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
"இன்று, இந்தியாவிடம் எதிர்பார்ப்பது அதன் அத்தனை திறன்களையும் பயன்படுத்தி யூத ஆதிக்கத்தினால் காஸாவில் நடக்கும் குற்றங்களை நிறுத்த வேண்டும்” என அதிபர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் முற்றுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் உடனடி போர் நிறுத்தத்திற்காகவும் மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சிக்கு ஈரான் ஆதரவளிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி போர் விரிவாவதைத் தடுப்பது குறித்தும் வாழ்வாதார உதவிகள் கிடைக்கப் பெறுவதையும் அமைதியும் நிலைத்தன்மையும் அந்தப் பகுதிகளில் திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை (நவ.3) ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் உடன் மோடி பேசினார். இரு தலைவர்களும் போர்ப் பகுதிகளில் பாதுகாப்பான மற்றும் மனிதத்துவ சூழல் விரைவில் திரும்ப தீர்வு காண ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.