» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாள நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
சனி 4, நவம்பர் 2023 12:10:58 PM (IST)
நேபாள நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், 'நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது, நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணை நிற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.