» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை காஸாவில் முழு முற்றுகை தொடரும்: இஸ்ரேல் திட்டவட்டம்!
வெள்ளி 13, அக்டோபர் 2023 10:14:38 AM (IST)

ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை முழு முற்றுகை தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதி மருத்துவமனைகள் மின்சாரமில்லாமல் சவக்கிடங்குகளாக மாறுவதைத் தவிா்க்கும் வகையில், காஸாவுக்குள் எரிபொருளை மட்டும் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்ற சா்வதேச செஞ்சிலுவை கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து இஸ்ரேல் இவ்வாறு கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது: காஸாவுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து பிணைக் கைதிகளும் இஸ்ரேலுக்குத் திரும்ப வரும்வரை காஸாவுக்கு மின்சாரம் அளிக்கப்படாது. அவா்களாக மின்சாரம் உற்பத்தி செய்துகொள்வதற்காக ஒரு எரிபொருள் லாரியும் அந்தப் பகுதிக்குள் நுழையாது. மனிதாபிமானத்தால்தான் மனிதாபிமானத்தைப் பெற முடியும். இந்த விவகாரத்தில் எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்றாா்.
தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் ராக்கெட் தாக்குதல் நடத்துவது, அதற்குப் பதிலடியாக காஸாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவது என்று பல ஆண்டுகளாக அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 6 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டது.
ஏற்கெனவே, இஸ்ரேலின் கடுமையான விமானத் தாக்குதலால் காஸாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகி வருகின்றன. மேலும், இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். பல்லாயிரக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளனா். இந்தச் சூழலில், காஸாவின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீா்ந்துபோனதால் அதன் இயக்கம் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.
அதையடுத்து, காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றியமையாத மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கஸாவில் பணியாற்றி வரும் சா்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய இயக்குநா் ஃபேப்ரிஸியோ காா்போனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மின்சாரம் இல்லாவிட்டால் காஸாவிலுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் சவக் கிடங்காகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்குள் எரிபொருளை இஸ்ரேல் அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினாா். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் இவ்வாறு திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










