» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மியில் பெரும் பிளவு: ராகவ் சத்தா, சந்தீப் பதக் உள்ளிட்ட 7 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியம்!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:28:08 PM (IST)



ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய ராஜ்யசபா உறுப்பினர்களான ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் உள்ளிட்ட 7 எம்பிக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் மாற்றம் குறித்து, பாஜக தலைமையகத்தில் ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராகவ் சத்தா, "ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இந்திய அரசியல் சாசன விதிகளின்படி பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம். இதற்கான கடிதங்களையும், ஆதரவு ஆவணங்களையும் ராஜ்யசபா தலைவரிடம் சமர்ப்பித்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.

தனது விலகல் குறித்துக் குறிப்பிட்ட ராகவ் சத்தா, "நான் இரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்த கட்சி, இன்று தனது கொள்கைகளிலிருந்தும், அடிப்படை விழுமியங்களிலிருந்தும் முழுமையாக விலகிவிட்டது. ஊழலை ஒழிக்க வந்த கட்சி, இன்று ஊழல் கட்சியாக மாறிவிட்டது. நான் 'தவறான கட்சியில் இருந்த சரியான நபர்' என்பதை கடந்த சில நாட்களாக உணர்ந்தேன். 

எளிய மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்ப முயன்றபோது, எனது சொந்தக் கட்சியே அதை ஒடுக்கப் பார்த்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்; பாஜகவில் இருந்தபடியே அதே அர்ப்பணிப்புடன் உங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வேன்" என்று கூறினார். இந்த அதிரடி முடிவின்படி, ராஜ்யசபாவில் இருந்த 10 ஆம் ஆத்மி எம்பிக்களில் ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ரஜிந்தர் குப்தா, விக்ரம் ஷானே, ஸ்வாதி மலிவால் ஆகிய 7 பேர் விலகியுள்ளனர்.  

பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய எம்பிக்கள், "பயங்கரவாதத்தை வேரறுப்பதிலும், இந்தியாவை உலகின் முதல் 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பெறச் செய்வதிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கைகள் போற்றத்தக்கவை. மக்களின் ஆதரவை மூன்று முறை பெற்றுள்ள மோடியின் தலைமையில் பணியாற்றுவதையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறுதிப்பாட்டுடன் இணைந்து நாட்டுக்காக உழைப்பதையும் நான் பெரும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பத்து ஆண்டுகளாகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆம் ஆத்மி கட்சிக்காகச் செலவிட்டதாகவும், இன்று முதல் தனது பாதை வேறானது என்றும் சந்தீப் பதக் தெரிவித்தார். சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory