» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் கடுமையான துப்பாக்கி சண்டை: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஞாயிறு 3, நவம்பர் 2024 10:15:43 AM (IST)

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

நேற்று முன்தினம் பட்காம் மாவட்டத்தில் உள்ள மசாமா பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் ஸ்ரீநகர், அனந்த்நாக், பந்திபோரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ராணுவத்தினர் தீவிரப்படுத்தினர்.இந்த நிலையில் அனந்த்நாக் மாவட்டத்தின் ஹல்கன் கலி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ராணுவத்தினர், போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குழுவாக இணைந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கிதுப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் காஷ்மீரை சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என நம்பப்படுவதால் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதேபோல தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ராணுவ தளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை தொடர்ந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது உடலை ராணுவத்தினர் கைப்பற்றினர். அவர் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் மாலை பந்திபோரா மாவட்டத்தில் உள்ள பனார் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு ஈடுகொடுக்க முடியாத பயங்கரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதனையடுத்து அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory