» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்

புதன் 9, அக்டோபர் 2024 10:55:11 AM (IST)


டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்

இந்திய திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு, தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, 70-வது தேசிய திரைப்பட விருதுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. 2022-ம்ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர்கள் என பல விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்திய அளவில் சிறந்த படமாக மலையாளத்தில் வெளியான ‘ஆட்டம்’ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக நித்யா மேனனுக்கும் ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக மானசி பரேக்குக்கும் பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. சிறந்த இயக்குநர் விருதுக்கு ‘ஊஞ்சாய்’ என்ற இந்திப் படத்தை இயக்கிய சூரஜ் ஆர். பர்ஜாத்யா தேர்வானார்.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’, சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), பின்னணி இசை (ஏ.ஆர்.ரஹ்மான்), ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்காகச் சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த அன்பறிவ் சகோதரர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக நடன இயக்குநர்கள் சதீஷ் கிருஷ்ணன், ஜானி மாஸ்டர் ஆகியோர் தேர்வானார்கள். ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், அவருக்கான விருது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். சிறந்த நடிகர் விருதை ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை விருதை நித்யா மேனன், மானசி பரேக், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள், நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றனர்.

‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்கான விருதைப் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த திரைப்படத்துக்காக, சிறந்த பின்னணிஇசைக்கான விருதை ஏ.ஆர் ரஹ்மான் பெற்றார். இது அவருக்கு 7-வது தேசிய விருது ஆகும்.

‘பிரம்மாஸ்திரா-பாகம் 1’ என்ற இந்திப் படத்துக்காக, ப்ரீதம் சக்கரவர்த்திக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த கன்னட படத்துக்கான’ தேசிய விருதை ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மனைவி பெற்றுக்கொண்டார். ‘குல்மொஹர்’ என்ற இந்திப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. இது அவருக்கு 4-வது தேசிய விருது ஆகும்.

விழாவில் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மணிரத்னம் ஆச்சரியம்: ஏ.ஆர்.ரஹ்மான் 7-வது முறையாக தேசிய விருது பெற்றது குறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்டபோது, "அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். முதல் படத்திலிருந்து இப்போது வரை அவருக்கு அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

விருது பெற்றது குறித்து பேசிய நித்யா மேனன், "முதன் முறையாக தேசிய விருது வாங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுவரை நான் நடித்ததற்கான அங்கீகாரமாக இதை பார்க்கிறேன். ஒரு நடிகையாக இந்த விருது முக்கியம். இதை எனது படக்குழுவுக்கு சமர்ப்பிக்கிறேன். தனுஷுடன் மீண்டும் நடிக்கிறேன்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory