தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தத் தனியார் பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பட்டாசுகளைத் தயாரித்துச் சட்டவிரோதமாக இருப்பு வைத்துள்ளதாகவும், வெடிமருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கந்தகம் (Sulfur) அளவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும் வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு அந்த ஆலையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், ஆலையில் அதிகளவில் பட்டாசுகளைத் தயாரித்து, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் 2 கன்டெய்னர்கள் மற்றும் 1 கிடங்கில் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வெடிமருந்து கலவையில் கந்தகத்தின் அளவுகளில் தீவிர முரண்பாடுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
கூட்டு ஆய்வுக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, எட்டயபுரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
பின்னர், விதிகளை மீறிப் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 கன்டெய்னர்கள், கட்டடம், கந்தகம் சேமிப்பு அறை மற்றும் பட்டாசு கிடங்கு ஆகியவற்றுக்குத் தனித்தனியாகச் சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து, பட்டாசு ஆலையின் பிரதான வாயிலையும் மூடி அதிகாரிகள் முழுமையாகச் சீல் வைத்தனர்.

