மகாராஷ்டிரத்தில் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படவிருந்த நிலையில், வெங்காயத்தின் தரத்தில் குறை இருந்ததாகக் கூறி கொள்முதல் ஆணையை தமிழக அரசு ரத்து செய்தது. இதனிடையே, வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து விவகாரம் குறித்து தவெக அரசை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.

இந்த நிலையில், ஆணை ரத்து குறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்றேவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCC) ஆணை வழங்கியிருந்தது.

மகாராஷ்டித்தில் உள்ள நாசிக்கிற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, தமிழ்நாட்டுக்கு வெங்காயம் ஒரு நாள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை ஆய்வு செய்தபோது. 'ஏ' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை, அக். 31-ல் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அப்போது மூட்டைகளில் 50.2 சதவிகித வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ அளவைவிட குறைவாகவும், 20 முதல் 26 சதவிகிதம் வரை அழுகியதோடு, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது.

பொருளின் தரம் சரியாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெங்காயத்தின் தரம் குறைவாக இருந்ததால் பொதுமக்களின் நலன்கருதி கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது. முன்பணம் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொள்முதல் ஆணை அக். 31-ல் ரத்து செய்யப்பட்டதால், அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.