தமிழ்நாடு அரசின் சார்பில் வெளிநாடு சென்று முதுகலைப் படிப்பு பயிலும் 10 முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு 2026-2027-ஆம் கல்வியாண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான 10 முஸ்லிம் மாணவர்களுக்குத் தலா ரூ.36.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி மற்றும் நிபந்தனைகள்:

பல்கலைக்கழகத் தகுதி: 2026-2027-ஆம் கல்வியாண்டில் முதுகலைப் பட்டம் படிக்க உலகளாவிய QS (Quacquarelli Symonds) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதம் (Unconditional offer letter) பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரம்பு: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இளநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு இணையான தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகள்: மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரப் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலைச் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் "ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2026 ஆகும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.