தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி லெக்கம்மாள் (28). இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் விஷப் பாம்பு ஒன்று லெக்கம்மாளைக் கடித்துள்ளது.

தூக்கக் கலக்கத்தில் இருந்த லெக்கம்மாள், பாம்பு கடித்ததை உணராமல், ஏதோ பூச்சி ஊர்வது போல் இருந்ததால் அதை மட்டும் கையால் தட்டிவிட்டுத் தொடர்ந்து உறங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை லெக்கம்மாளுக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, குறுக்குச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி ஊசி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், லெக்கம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.