ந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி.எல்., பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல். ஆகியவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி மறுபரிசீலனை செய்து நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது நிர்ணயித்துள்ளன. இதில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேவேளையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.11.50 உயர்வு - புதிய விலை:

சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.66.50 அதிகரித்து, ரூ.2,983-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பு நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.11.50 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு சிலிண்டர் ரூ.2,994.50-க்கு விற்பனையாகிறது.

வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வணிக சிலிண்டரின் இந்த தொடர் விலை உயர்வு ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, வணிக சிலிண்டர் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.