திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH-138-ல் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சேதங்களைத் தொடர்ந்து, சுமார் ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் நிரந்தரச் சீரமைப்புப் பணிக்கான டெண்டர் நடவடிக்கையைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள டெண்டர் ஆவணத்தின்படி, தாமிரபரணி பெரிய பாலத்தின் இடதுபுறப் பாதையில் (LHS Carriageway) உள்ள 2, 4, 7, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய எட்டு Span-களின் சேதமடைந்த Deck Slab பகுதிகளை நிரந்தரமாகச் சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான மதிப்பீடு ரூ.3,01,19,970 ஆகவும், பணிக்காலம் 90 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; டெண்டர் எண் 2026_NHAI_295761_1 கொண்ட இந்த ஏலம் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி திறக்கப்பட்டது.
டெண்டர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டக் குறிப்புகளின்படி, இந்த ஏலத்தில் சென்னையைச் சேர்ந்த M/s HPR Construction நிறுவனம் மட்டும் பங்கேற்று, அரசின் மதிப்பீட்டைவிட சுமார் 1 சதவீதம் குறைவாக ரூ.2,98,18,770 (GST தவிர) தொகைக்கு விலைப்புள்ளி சமர்ப்பித்துள்ளது. தேவையான ஆவணங்கள் மற்றும் Performance Security சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் அந்நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வல்லநாடு தாமிரபரணி பாலத்தில் முன்பு சுமார் ரூ.4 கோடி செலவில் ஒரு முறையும், ரூ.13.28 கோடி மதிப்பில் இரண்டு முறையும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் சேதங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. 8 Deck Slab பகுதிகளைத் தவிரப் பாலத்தின் மற்ற பகுதிகளின் உறுதித்தன்மை, முந்தைய பணிகளின் தொழில்நுட்ப ஆய்வுகள், ஒப்பந்ததாரர்கள், தரச் சான்றிதழ் அளித்த அதிகாரிகள், உத்தரவாதக் காலம் மற்றும் சேதங்களுக்கான அடிப்படைக் காரணம் ஆகியவை குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற்றும், அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் வரும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர் மு. சுகன் கிறிஸ்டோபர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பாலத்தின் பாதுகாப்பில் சமரசம் இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
எட்டு Deck Slab பகுதிகள் மட்டுமின்றி முழுப் பாலத்திற்கும் சுயாதீன நிபுணர் குழு மூலம் கட்டமைப்புப் பாதுகாப்பு ஆய்வு நடத்த வேண்டும்; முந்தைய சேதங்களுக்கான காரணங்கள், ஒப்பந்ததாரர்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் தற்போதைய பணிக்கான BOQ, தொழில்நுட்ப விவரங்களைப் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும்; பணிகள் முடிந்த பிறகு சுயாதீனத் தர ஆய்வு மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும்; எதிர்காலத்தில் சேதம் ஏற்பட்டால் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உத்தரவாத விதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

