தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பொறுப்பு முதல்வர் ச.ஆ. சண்முகம் வழிகாட்டுதலின்படி, அக்கல்லூரியின் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவை இணைந்து இம்முகாமை ஏற்பாடு செய்தன.
தருவைகுளம் மீன்பிடி கிராமத்தில் நடைபெற்ற இந்த வெளிவளாக விழிப்புணர்வு முகாமில் 20 மீனவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்க விழா பிற்பகல் 4.00 மணிக்குத் தொடங்கியது. மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் கருப்பசாமி வரவேற்புரையாற்றினார்.
உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான (பொறுப்பு) ரா. துரைராஜா, "தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ஐப் பின்பற்றுவதன் மூலம் நிலைத்த மற்றும் நீடித்த கடல் மீன்வளப் பாதுகாப்பை உறுதி செய்தல்" குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
உதவிப் பேராசிரியர் கருப்பசாமி "காலநிலை மாற்றங்களினால் மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரங்களில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் முனைவர் த. நிர்மல் "கடல் மீன் வளங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகள்" குறித்து மீனவர்களுக்கு விளக்கமளித்தார்.
நிகழ்ச்சிக்குக் கிராமக் குழுத் தலைவர் / விசைப்படகு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் லூர்து தலைமை தாங்கினார். தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜி.ஏ. புஷ்ரா ஷப்னம், மீன்வள மேற்பார்வையாளர் பிரின்ஸ் ஆகியோர் முகாம் நடத்த உதவி புரிந்தனர். துறை ஊழியர் அன்டோவும் நிகழ்வில் உடனிருந்தார். நிறைவாக உதவிப் பேராசிரியர் த. நிர்மல் நன்றியுரை கூறினார்.

