நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்கி வரும் டாடா சோலார் ஆலையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற 7 வடமாநிலக் கன்டெய்னர் லாரிகளைக் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தமிழக லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள டாடா நிறுவனத்தின் சோலார் உற்பத்தி ஆலையிலிருந்து கன்டெய்னர் லாரிகள் மூலமாகத் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சோலார் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இப்பொருட்களைக் கொண்டு செல்லத் தமிழக லாரிகளைப் பயன்படுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதனைப் புறந்தள்ளிவிட்டுத் தொடர்ந்து வடமாநில லாரிகளையும், வடமாநிலங்களைச் சேர்ந்த லாரி புக்கிங் ஏஜென்சிகளையும் ஆலை நிர்வாகம் பயன்படுத்தி வருவதாகத் தமிழக லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டாடா ஆலையிலிருந்து மதுரைக்குச் சோலார் பொருட்களை ஏற்றிக்கொண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த 7 கன்டெய்னர் லாரிகள் சென்றுகொண்டிருந்தன. இந்த லாரிகள் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, 'இ-வாகன் சேவை' அமைப்பைச் சேர்ந்த தமிழக லாரி உரிமையாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து லாரிகளைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட 7 லாரிகளையும் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு போய் நிறுத்தினர்.

இது குறித்து 'இ-வாகன் சேவை' அமைப்பின் தலைவர் கணேஷ்குமார் கூறியதாவது: "டாடா சோலார் ஆலையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு மட்டுமல்லாது, தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்ப வடமாநில லாரிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தொழில் செய்துவிட்டு, அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த லாரிகளைப் பயன்படுத்தாமல் வடமாநில லாரிகளைப் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிமாநில லாரிகள் உள்ளூர்ப் பகுதியில் பொருட்களை எடுத்து விநியோகம் செய்தால் ரூ.40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. இதனைப் பரிசீலித்துத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

விதிமுறைகளை மீறியது மற்றும் வாகன ஆவணங்கள் குறித்து தீவிர ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.