கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடைமுறையும் தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் 19-வது 'நல்சார் - நீதிபதி பி.ஆர். சாவ்னி நினைவு நாள்' நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு குடிமக்களை வாக்குரிமை பெற்றவர்கள், வாக்குரிமை இல்லாதவர்கள் என இரு வேறு பிரிவுகளாகப் பிரிக்கவில்லை.
கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறித்து இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதை எந்தவொரு மாற்று வாதத்தாலும் நியாயப்படுத்த முடியாது. இது அரசியலமைப்பின் அடிப்படையையே தகர்க்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14 அனைவருக்கும் சமத்துவ உரிமையை உறுதி செய்கிறது. சட்டப்பிரிவு 326 வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்குகிறது. எனவே, வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகள் இந்த விதிகளுக்கு முற்றிலும் எதிரானவை.
ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒருமுறை இடம்பெற்றுவிட்டால், அந்த நபர் இறந்துவிட்டார் என்பதைத் தவிர, உரிய அறிவிப்பு வழங்கி அவரது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் பெயரைக் தன்னிச்சையாக நீக்க முடியாது.
இந்தியக் குடிமகனின் வாக்குரிமையையோ அல்லது வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் உரிமையையையோ அவரது குடியுரிமையிலிருந்து பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிப்பது உடலிலிருந்து ஆன்மாவை அகற்றுவதற்குச் சமமாகும்" எனக் கூறினார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த உரை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்து கவனத்தையும் ஈர்த்துள்ளது.

