உக்ரைன் மீதான போரால் ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, அங்குள்ள கச்சா எண்ணெயை மலிவு விலையில் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியது. அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வந்தது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ரஷியாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாத இறக்குமதியான நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களை விட மிக அதிகம்.

இதற்கிடையே, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரஷிய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் 32 தாக்குதல்களை நடத்தியுள்ளது. சராசரியாக ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால், ரஷியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் முடங்கிப் பெட்ரோல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல் தேவைக்காக இந்தியாவை எதிர்பார்க்கும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் ரஷியா நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பீப்பாய் பெட்ரோலை வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியுள்ளது. அதில் பெரும் பகுதியை இந்தியாவே ஏற்றுமதி செய்துள்ளது.

குறிப்பாக, ரஷியாவின் 'ரோஸ்நெப்ட்' நிறுவனத்திற்கு 50 சதவீதப் பங்குகள் உள்ள, குஜராத்தில் இயங்கும் நயாரா எனர்ஜியின் 'வாடிநார்' சுத்திகரிப்பு நிலையம் அதிக அளவிலான பெட்ரோலை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ரஷியாவிடம் வாங்கிய கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, அதே ரஷியாவுக்கு இந்தியா மீண்டும் பெட்ரோலாக ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.