தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பேணிப் காப்பதன் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

‘வீ த லீடர்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பில் இப்போட்டி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் 75 பேர், பெண்கள் பிரிவில் 47 பேர், சிறுவர்கள் பிரிவில் 105 பேர், சிறுமியர் பிரிவில் 64 பேர் என மொத்தம் 291 பேர் கலந்து கொண்டு ஓடினர். இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கடம்பூர் அருண்ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முதலாவதாக நடைபெற்ற ஆண்களுக்கான 14 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசரத் முதலிடம் பிடித்து முதல் பரிசை பெற்றார். பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் இரண்டாம் பரிசையும், ஊட்டியைச் சேர்ந்த நரேந்தர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

பெண்களுக்கான 10 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த அஞ்சலி முதலிடம் பிடித்து முதல் பரிசை பெற்றார். புதூரைச் சேர்ந்த உதயா தர்ஷினி இரண்டாம் பரிசையும், ஊட்டியைச் சேர்ந்த சோனாலி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

சிறுவர்களுக்கான 4 கிலோமீட்டர் போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவினாஷ் முதல் பரிசையும், விளாத்திகுளத்தைச் சேர்ந்த கௌதம் இரண்டாம் பரிசையும், சிவகாசியைச் சேர்ந்த இளையராஜா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

சிறுமியருக்கான 4 கிலோமீட்டர் போட்டியில் புதூர் அரசு பள்ளி மாணவி முருகசெல்வி முதலிடம் பிடித்து முதல் பரிசை பெற்றார்.

ஆனைக்கூட்டத்தைச் சேர்ந்த சுதந்திர லட்சுமி இரண்டாம் பரிசையும், அதே பகுதியைச் சேர்ந்த நிபிதா பாண்டி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் ரொக்கப் பரிசுத்தொகை, வெற்றிக் கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Marathonvilathi4i.jpg

இந்நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் காட்டுராஜா, நேஷனல் கந்தசாமி, காமாட்சி அருணாச்சலம், பொன்ராஜ், மகேஸ்வரன், சிவபெருமாள், சரண்ராஜ், சீனி, தங்கம், வெங்கடேஷ், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் சத்தியசீலன், மாதவன், ராஜேஷ் கனி மற்றும் கோவில்பட்டி தொகுதி நிர்வாகிகள் சீனிவாசன், வேல்முருகன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.