தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் ராஜ் என்பவரது மகன் பூபதி பொன்ராஜ் (23). இவர் உடன்குடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று பூபதி பொன்ராஜ், தான் வேலை பார்க்கும் ஹோட்டல் உரிமையாளரின் 8 வயது மகனை உடன்குடி தேரியூர் தென்றல் நகர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுவனைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார்.
சிறுவனுக்கு மது கொடுப்பதை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த பூபதி பொன்ராஜ், அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் உடனடியாகக் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பூபதி பொன்ராஜை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

