தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் நிரஞ்சன் (19). இவர் கடந்த பிப்ரவரி மாதம் விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற அடிதடி சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மார்ச் மாதம் சிறையின் சமையலறை வழியாகத் தப்பிச் சென்ற இவர், மீனாட்சிபுரம் காட்டுப்பகுதியில் காதலியைச் சந்திக்கப் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுப் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிரஞ்சன், விளாத்திகுளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்குப் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் கோவில்பட்டி கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
வழியில் சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட அழைத்துச் சென்றபோது, நிரஞ்சன் நைஸாக நழுவி 2-வது முறையாகத் தப்பி ஓடினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அசோக் பாபு, உதவி ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், மாப்பிள்ளையூரணி பகுதியில் நிரஞ்சன் சுற்றித்திரிவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

