சூரங்குடி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் E.வேலாயுதபுரம், காலனி தெருவைச் சேர்ந்தவர் தாஸ் என்பவரது மகன் ஜெயராஜ் (60). இவர் நேற்று காலை 7:30 மணியளவில் தூத்துக்குடி - வேம்பார் சாலையில் உள்ள E.வேலாயுதபுரம் கிராமம், பெரியசாமிபுரம் விளக்கு அருகே நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், இன்று அதிகாலை 4:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சூரங்குடி காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.