தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையப் போலீசார், டேவிஸ்புரம் சந்திப்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்திப் பிடித்துச் சோதனை செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கலைமணி (24), கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (22) மற்றும் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த முத்துராஜ் (34) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் விற்பனைக்காக 3.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி எடுத்து வந்ததும் அம்பலமானது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த தாளமுத்து நகர் போலீசார், அவர்களிடமிருந்த 3.5 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

