தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் போஸ் குமார் (26). இவருக்கும், இந்திரா நகர் நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ஹரிஹரன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்திரா நகர் வெற்றி விநாயகர் கோவில் அருகே போஸ் குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழியில் மறித்த ஹரிஹரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், தகாத வார்த்தைகளால் பேசி அவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துத் தப்பியோடியது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த போஸ் குமார், உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து போஸ் குமார் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட இந்திரா நகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (எ) கார்த்திக் (19), ஹரிஹரன் (19), வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (41) மற்றும் 17 வயதுடைய சிறார்கள் 2 பேர் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

